Tuesday, August 25, 2009

சட்டம் ஒரு கழுதை.......?
ஒரு ஜனநாயக நாட்டில் சட்டம் என்பது மக்களுக்காக இருக்க வேண்டுமே அல்லாமல் ஆட்சியில் இருப்பவர்களுக்காக இருக்கக்கூடாது. அப்படி இருக்குமானால், அந்த சட்டத்தை தூக்கி குப்பையில் போடும் உரிமை மக்களுக்கு உண்டு. காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, தென் மாவட்டத்திற்கு ஒருமுறை சென்றிருந்தார். அப்பொழுது, அவரை ஒரு விதவை பெண் சந்தித்தாள். தன் கணவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் இருந்ததாகவும், ஒரு சில மாதங்களுக்கு முன்பு, பணியில் இருக்கும் பொழுதே அவர் மரணமடைந்து விட்டதாக கூறினார். அதனால் தனக்கு எவ்வித வருமானமும் இல்லை என்றும், தன் மகனுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதி இருப்பதாகவும், எனவே அவனுக்கு பணி வழங்க வேண்டும் எனவும் கூறினார். தன்னுடன் இருந்த மாவட்ட ஆட்சியாளரிடம், என்னவென்று காமராஜர் கேட்டார். அவரும் அது உண்மை என்றும், ஆனால் சட்டப்படி அந்த காரணத்துக்காக அவருடைய மகனுக்கு பணி வழங்க முடியாது என்றும் கூறினார். அதிர்ச்சி அடைந்த காமராஜர் மாவட்ட ஆட்சியாளரிடம் " நியாயத் தின் அடிப்படையில்தான் சட்டம் இருக்கவேண்டும். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர் குடும்பம் எப்படி வாடலாம்? " எனக்கூறி அங்கேயே வேலைக்கான ஆர்டரை வழங்க சொன்னார்.
ஆனால் இன்று? மின்சார தட்டுப்பாடு என கூறும் அரசு, தமிழ் நாட்டிலுள்ள மு. நரசிம்மன் என்பவரின், "ஒரு பங்கு மின்சாரத்தை மூன்று மடங்காக மாற்றும் கண்டுபிடிப்பு" -க்கு அங்கிகாரம் வழங்க மறுக்கும் கொடுமை! அவருடைய ஆதங்கத்தை நீங்களே பாருங்கள்! வெட்கக்கேடு! வீடீயோவை பாருங்கள்.

Monday, August 24, 2009

ஒரு எளவும் புரியல! நீங்களாவது சொல்லித்தொலைங்க.

சுதந்திர தினத்தன்று மதியம் சாப்பிட்டு விட்டு நிம்மதியா தூங்கலாம்னு பெட் ரூமுக்கு போனேன். மணியை பார்த்தேன் சரியா 2.55. அப்பாடா எப்படியும் இரண்டு மணி நேரம் தூங்கலாம் என்ற சந்தோஷத்தோடு கட்டிலில் படுத்தேன். தூக்கம் கண்ணை இழுத்தது. அந்த நேரம் பார்த்து மொபைல் சினுங்கியது. எடுத்துப் பார்த்தால்
ஒரு மெஸேஜ் வந்திருந்தது.ஓபன் பண்ணி பார்த்தா நம்ம் "கிளீன் சிட்" பார்ட்டிதான் ( சி.பி.ஐ தான் ) அனுப்பியிருந்தது.

" to fight corruption inform CBI: SP: SU CHENNAI IN. 9444770937 / EMAIL: spsusuchn?cbi.gov.in., on demand of bribe / corrupt practice by central govt servants -jai hind. sender:BC:CBI-CHN "

எனக்கு பத்திட்டு வந்தது. ஏற்கனவே "http://www.scribd.com/doc/18019938/Sonia-Gandhi-Got-2-Billion-Dollars-From-KGB"சைட்டில சுப்பிரமனியசாமி, சோனியா காந்தி கே.ஜி.பி -யிடமிருந்து வாங்கிய இரண்டு பில்லியன் டாலருக்காக அவர் மீது வழ்க்கு தொடர வேண்டும், என ஆதாரத்துடன் சி.பி.ஐ க்கு எழுதிய கடிதத்தை படித்துவிட்டு கொலை வெறியோட இருந்தேன். அதோட இத்தாலி தொழில் அதிபர், டைட்லர், காஷ் மீர் பிரதமர் எல்லோருக்கும் கிளீன் சிட் கொடுக்க ஆரம்பிச்சதிலிருந்து , சி.பி.ஐ பத்தி நினைச்சாலே அவங்க, கழுத்தில டைப்ரைட்டரை மாட்டிக்கிட்டு, காங்கிரஸ் ஆபீஸ்ல நிக்கிற மாதிரியே தோனுது. அதாங்க ஊர்ல கழுத்தில ஆர்மோனிய பெட்டிய மாட்டிக்கிட்டு பாட்டு பாடிட்டு பிச்ச எடுப்பாங்களே ! அந்த காட்சி தான் நினைப்புக்கு வருது!.

" திமிங்கலத்தை எல்லாம் விட்டுருதீங்க. விரல் சைஸ்ல இருக்க் சின்ன மீனை பிடிக்க இப்படி தார்ப்பாய்சிட்டு வறீங்களே ! இது என்ன நியாயம்னு கேட்ட்கதோணிச்சு. போனை எடுத்தேன். " வேண்டாம் . வேண்ட்டாம். வம்பா சீரழிஞ்சு, சின்னா பின்னாமா ஆகப்போற !. பொத்திக்கிட்டு சும்மா கிட." அப்படின்னு உள் மனசு அக்கறையா அலறுச்சு. இந்தியன் தாத்தா மாதிரி வேகம் வந்துது. மறுபடியும் போனை கையில எடுத்தேன். " இந்தியன் தாத்தா நினைப்பா? இந்தியன் தாத்தா மாதிரி நினச்சு நடந்துக்கிட்ட கவுண்ட மணி கதை தெரியுமில்ல?" என மறுபடியும் அலறியது. வம்பு எதுக்கு ? பேசாம ராசி பலனை பாக்கலாம்ன்னு நியூஸ் பேப்பரை எடுத்து பார்த்தேன் . என் ராசிக்கு "வாயில சனி" அப்படின்னு போட்டிருந்தது.

பகுத்தறிவு பாசறை கலைஞரே மஞ்சள் துண்டு, குலதெய்வம் கோயில், ராகுகாலம் , எமகண்டம் இதையெல்லாம் பாக்கிறப்ப, நான் மட்டும் எம் மாத்திரம்?

இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா! மனசுக்குள்ளே சொல்லிட்டு போய் படுத்த் தூங்கிட்டேன். நீங்களே சொல்லுங்க நான் செய்தது சரியா? தப்பா?. ஒரு எளவும் புரியல .




COPY & PASTE

இது குமரிமைந்தன் அவர்களின் பதிவு. நல்ல பதிவுகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் நல்ல நோக்கில் இங்கு Copy & Paste செய்யப்பட்டுள்ளது. பின்னூட்டங்களை அவருடைய வலைப்பக்கத்திற்கு http://kumarimainthan.blogspot.com/ சென்று அளிக்கவும். 15.7.09

பெரியாரை ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை

பெரியாரின் பணி பற்றிய திறனாய்வு முழுமூச்சாக நடத்தப்படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். சாதியை ஒழிப்பதில் பெரியாரின் பங்கு என்ன என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் பெரியார் ஆற்றிய பணிகளுக்குப் பின்னும் சாதியத்தின் அடித்தளங்களான சாதி அடிப்படையிலான தொழில்களும் சாதியடிப்படையில் இருப்பிடங்களைக் கொண்ட ஊரமைப்பும் இன்னும் அசையவில்லை.

சாதி என்பது தமிழகத்தில் அரிப்பனிலிருந்து தொடங்கி அந்தணன் வரை நம் ஒவ்வொருவரின் குருதியிலும் இரண்டறக் கலந்துள்ளது. மிக நுண்மையாக கீழேயுள்ள சாதியினரின் ″ஆக்கிரமிப்பிலிருந்து″ நம்மைக் காத்துக் கொள்வதில் நாம் மிக விழிப்பாக உள்ளோம். இந்த நிகழ்முறையின் ஓர் அடையாளமாகவே பார்ப்பனர்கள் உள்ளனர். பெரியார் இந்த அடையாளத்துக்கு எதிராகத் தான் போராடினாரேயொழிய உண்மையான நோய்க்கு எதிராக எதையுமே செய்யவில்லை. அது மட்டுமல்ல சாதிவெறி பிடித்த பார்ப்பனரில்லா அனைத்துச் சாதியினரையும் தன் பக்கத்திலேயே வைத்துக்கொள்ள வெள்ளையன் வகுத்துக் கொடுத்த ஆரியன் - திராவிடன் இனக் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டார்.

வருணக் கோட்பாடு தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து புகுத்தப்பட்டது என்ற கருத்து தவறென்பது தமிழர்களின் வாழ்வில் நாள்தோறும் மெய்ப்பிக்கப்படுகிறது.

பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான்
என்று தொழிலடிப்படையான வருணப் பாகுபாட்டையும்

மறப்பினும் ஓத்துக் கொள்ளலாகும் பார்ப்பான் தன்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்
என்று பிறப்படிப்படையிலான வருணப் பாகுபாட்டையும் திருக்குறளே வலியுறுத்துவதைக் காண நாம் மறுத்துவிட்டோம்.

இந்தப் பிறப்படிப்படையிலான வருணப் பாகுபாடே பின்னாளில், அரிசி விற்கும் அந்தணர்க் கோர்மழை
புருசனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை
வரிசை தப்பிய மன்னவர்க் கோர்மழை
வருசம் மூன்று மழை யாகுமே
என்று பிரித்துக் கூறப்பட்டிருப்பதும் நம் சிந்தையைத் தொடவில்லை. மனு பார்ப்பனர் கண்ணோட்டத்திலிருந்து வலியுறுத்தியதை மேலே காட்டப்பட்டுள்ள தமிழ்ப் பாக்கள் பார்ப்பனர் அல்லாதார் கண்ணோட்டத்திலிருந்து வலியுறுத்துவதிலிருந்து வருணப் பாகுபாட்டுக்கும் சாதியத்துக்கும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே காரணம் என்பது நடைமுறையில் மட்டுமல்ல இலக்கியச் சான்றுகளாலும் விளங்குகிறது.

முதுகுளத்தூர் கலவரத்துக்குப் பின் முத்துராமலிங்கத் தேவர் சிறைவைக்கப்பட்டதை ஆதரித்ததாகப் பெரியார் பாராட்டப்பட்டுள்ளார். ஆனால் அக்கலரவத்துக்கு முன்பே அவர் பெரியாரை அவரது கொள்கைகளின் அடிப்படையில் வெளிப்படையாகவே போருக்கழைத்தார். ஆனால் பெரியார் அந்தச் சூழ்நிலையில் வீரம் காட்டவில்லை. கலவரம் முடிந்த பின் ஆட்சியாளர்களின் பின்னால் நின்று கொண்டு அவர்களைப் பாராட்டினார். அதனால் தான் அன்று முடிந்திருக்க வேண்டிய சிக்கல்கள் இன்று ஊர் ஊராக, தெருத் தெருவாக, மாவட்டம் மாவட்டமாகக் கலவரமாகத் தொடர்கிறது. தீர்வுக்கு வழியில்லை. நல்லதொரு தலைமை இல்லை.

சைவர்களுக்கும் பெரியாருக்கும் பூசல் ஏற்பட்டு இவர் அவர்களால் புறக்கணித்து ஒதுக்கப்பட்ட பின் இந்திப் போராட்டத்தை அறிவித்து அதற்குத் துணை தேடுவதென்ற சாக்கில் அவர்களிடம் சரண்டைந்தார். சாதியமைப்பின் எதிராகப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் பெயரும் புகழும் பொருளும் சேர்த்துக் கொண்டே சாதி வெறியர்களை அரவணைத்துச் சென்றார்.

சாதிகளுக்கெதிராகத் தமிழகத்தில் ஓர் இயக்கம் வலுப்பெற்று ஏதாவது அந்தத் திசையில் நிகழ்ந்திருக்கிறதென்றால் அதற்குப் பெரியார் காரணமல்ல. தமிழக மக்களே காரணம். ஏகலைவனுக்கு உளவியல் துணையாகத் துரோணரின் சிலை பயன்பட்டது போல் தமிழக மக்களுக்குப் பெரியாரின் பெயர் பயன்பட்டது. துரோணர் ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டார். பெரியாரோ தமிழர்களின் தன்முயற்சியையும் தன்னம்பிக்கையையும் அழித்து அடிமைத்தனமான, மக்கள் பகையான அரசுப் பதவிகளுக்காக ஒருவரோடு ஒருவர் மோதி அணு அணுவாகச் சிதைய வைக்கும் இட ஒதுக்கீட்டை மட்டுமே ஒரு செயல்திட்டமாக வைத்து அவர்களது எதிர்காலத்தையே அழித்துவிட்டார். தம் நாட்டையும் மொழியையும் மறந்து எந்த நாடு எந்த மாநிலம் என்றில்லாமல் மானங்கெட்டு அலையவைத்துவிட்டார். தம் மண்ணைப் பாலைவனமாக்கிவிட்டுத் திசை தெரியாமல் அல்லற்பட வைத்துவிட்டார்.

பெரியார் தாழ்த்தப்பட்டவருக்காக எதையாவது செய்திருப்பாரேல் இங்கு இன்று அம்பேத்கார் சிலைகள் நிறுவப்படும் தேவை இருந்திருக்காது. பிற்படுத்தப்பட்டோருக்கு ஏதாவது செய்திருப்பரேயானால் அவர்கள் இன்று சாதிகளாக முன்னை விட இறுகிப்போய் இப்படிப் பகைமை பாராட்டிக்கொண்டிருக்கமாட்டார்கள்.

பெரியாரின் பின் வந்தவர்கள் மீது அதாவது திராவிட இயக்க ஆட்சியாளர்கள் மீது குறை சொல்லிப் பயனில்லை. அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு அவர் முழு ஆதரவு வழங்கினார். அவர் வாழ்நாளில் அவர் ஆதரிக்காத ஆட்சித் தலைவர்கள் இருவரே. ஒருவர் இராசகோபாலாச்சாரியர், இன்னொருவர் பக்தவத்சலம். எனவே ஆட்சியாளர்களின் மீது பழிபோட்டு யாரும் பெரியாரைக் காப்பாற்றிவிட முடியாது. சொல்லொன்றும் செயலொன்றுமாகத் தமிழகத்தில் கலகத்தை ஏற்படுத்திச் சாதியத்தின் அடித்தளத்தைக் காத்தவர்களில் பெரியாரின் பங்கு முன்னிலை பெறுகிறது என்பது தான் பெரியாரைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை.

(18.10.95 தினமணியில் திரு. இரவிக்குமார் அவர்கள் எழுதிய ″உ.பி.விழாவின் எதிரொலி″ என்ற கட்டுரையின் எதிரொலியாகும் இது.)

நான் என்ன ஜாதி ? சொல்லுங்கள்!

நான் ஒரு அநாதை!


என் அப்பா அம்மா யார் ? என்று எனக்கு தெரியாது.

ஒரு வயதில் அனாதையாக ரோட்டில் கிடந்த என்னை எடுத்து வளாத்தது ஒரு தேவர்!

அதனால் என் அப்பா அம்மா என்ன ஜாதி என்றும் எனக்கு தெரியாது.

இப்பொழுது சொல்லுங்கள் நான் எந்த ஜாதி !

நீங்கள் தான் விஞ்ஞானத்தில் முன்னேறியவர்களாச்சே !

சொல்லுங்கள் நான் எந்த ஜாதி ?

என்ன தயககம் !.

செல்லம்மா என்ற பெண்ணை காணவில்லை.

அடையாளம் காணமுடியாத நிலையில் அழுகிய ஒரு சடலம் ஆற்ரங்கறையில்!.

அது ஆணா, பெண்ணா ? அது செல்லம்மாவின் உடல் தானா என்பதை டி.என்.எ டெஸ்ட் மூலம் கண்டு பிடித்து விடும் அளவிற்கு நீங்கள் திறமைசாலிகள் !.

உயிரோடு இருக்கும் நான், என்ன ஜாதி என்பதை கண்டு பிடிப்பதா உங்களுக்கு பெரிய விஷயம் ?.

கண்டுபிடித்து சொல்லுங்கள் நான் எந்த ஜாதிக்காரன் என்று !.
திருவள்ளுவருடன் ஒரு சிறப்பு பேட்டி.

"சுதந்திர தினத்தை முன்னிட்டு எங்கள் வலைப்பூவிற்கு பேட்டியளிக்க முன்வந்த தங்களுக்கு, எங்களது வலைப்பூ மற்றும் வலையுலகின் சார்பாக நன்றியை தெரி வித்துக்கொண்டு பேட்டியை துவங்குகிறேன்". ---( நமது நிருபர்).
" தமிழ் மொழியை வளர்ப்பது எப்படி?"
" அது என்ன ஆடா? அல்லது மாடா? நாம் தீனி போட்டு வளர்ப்பதற்கு!"
" சரி. அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழிதான் சிறந்தது. உங்கள் கருத்து என்ன?"
" உனக்கு எத்தனை மொழி தெரியும்?"
" தமிழும் ஆங்கிலமும்"
" அப்படியா? உனக்கு, உன் மனதில் நினைப்பதை ஆங்கிலத்தில், ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவன் புரியும் வகையில் பேச, எழுத தெரியுமா?"
" ஏதோ சுமாரா, குத்துமதிப்பா தெரியும்."
" அப்படின்னா முழுசாஆங்கிலம் தெரியாது!"
" ஆமாம்"
" தமிழ் மட்டும் தெரிந்த உனக்கு, தமிழ் மொழிதான் சிறந்தது என்று சொல்ல என்ன யோக்கிதை இருக்கு?
" ............................. தமிழ் வளச்சிக்காக நாங்கள் பாடுபடுவதைப் பற்றி என்ன நினைக் கிறீர்கள்?"
" மறுபடியும் முதல் கேள்விக்கே வந்திருக்கிறாய்!. சரி. என்ன பாடுபட்டீர்கள்? சொல் "
" தமிழை மாநிலத்தின் ஆட்சி மொழியாக்கியுள்ளோம். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய சட்டம் கொண்டு வந்துள்ளோம். அரசாங்க பேரூந்துகளில் திரு க்குறளை எழுதியுள்ளோம். தமிழ் அறிஞர்களின் புத்தகங்களை நாட்டுடமையாக் கியுள்ளோம். கல்வி நிலையங்களில், தமிழ் வழி கல்வியை கொண்டு வந்துள் ளோம். உங்களுக்கு பல இடங்களிலும் சிலை வைத்துள்ளோம். சமீபத்தில் 18 வருடமாக பெங்களூரில் திறக்கப்படாமலிருந்த உங்கள் சிலையை சமீபத்தில் திறந்துள்ளோம். இவையெல்லாம் எங்கள் சாதனைகள்."
" உன் பட்டியல் பெரிசாகத்தான் இருக்கிறது. இதனால் எப்படி தமிழ் வளரும் அல்லது வளர்ந்தது என்பதை சொல்ல முடியுமா?".
" எல்லோரும் சொல்கிறார்கள. அதனால்தா...........ன்?"
" நீ குறள் படித்திருக்கிறாயா?"
" நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது திருக்குறள் போட்டிகளில் கலந்து நிறைய பரிசுகள் பெற்றிருக்கிறேன்."
" நல்லது. எப்பொருள் என்று துவங்கும் குறளை சொல்லி அதன் விளக்கத்தையும் சொல்."
" எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. அதாவது எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையை காண்பதுதான் அறிவான் செயல்."
" என்னுடைய குறள் உலக மக்கள் அனைவருக்கும், எக்காலத்திலும் பொருந்தக் கூடிய நல் வழி காட்டும் கருத்துக்களை சொல்லும் நூல். அதைப்படித்திருக்கும் நீ எப்படி மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதை அப்படியே ஏற்றுக்கொண்டாய்?"
" தவறுதாங்க. இப்பத்தான் புரியுது."
" இப்ப நீ சொன்ன ஒவ்வொன்னுக்கும் நான் விளக்கம் சொல்றேன். கேள்."
" சரிங்க"
" தமிழ் நாட்டில பெரும்பாண்மையான மக்களுக்கு தெரிந்த மொழி தமிழ். அதுதான் ஆட்சி மொழியக இருக்கவேண்டும். இதில் என்ன சாதனை இருக்கு? இது மூலமா எப்படி தமிழ் வளர்ந்தது?"
" ஆமாம்!"
" கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, பேரூந்துகளில் திருக்குறளை எழுதுவது, தமிழ் அறிஞர்களின் ஆக்கங்களை அரசுடமையாக்குவது எல்லாம் பிரயோஜன மற்ற வேலை. அவ்ற்றை எல்லாம் படித்து நீங்கள் வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும். அதை செய்யவில்லை. ஆனால், தமிழ் வள்ரும் என சொல்லுவது வேடிக்கையாக இருக்கு!"
" ம் "
எனக்கு சிலை வையுங்கள் என்று நான் உங்களிடம் கேட்டேனா?. இல்லையே. அப்படியிருக்க உங்களை யார் வைக்க சொன்னது?. எனக்கு சிலை வைப்பதால் எப்படி தமிழ் வளரும்? என்னை பெருமைப்படுத்துவதுக்கு என்றால், அது நான் எழுதிய குறள் தானே காரணம்? அதை எழுதியதின் நோக்கமே "ஆண்டியிலிருந்து அரசன் வரை அனைவரும் நல்லறத்தை கடைப்பிடிக்க வேண்டும்" என்பதுதான்.
அவற்றை தூக்கியெறிந்துவிட்டு மாக்களாக வாழும் உங்களுக்கு என்னை சிறப்பிக்கும் தகுதியே கிடையாது.
" ஆமாங்க".
" மொழி என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளாமலே, மொழியை வளர்க்க போறேன் என்று இனி நீங்கயாரும் சொல்லக்கூடாது என்பதற்கு, மொழியை பற்றி விளக்கம் தரட்டுமா?
" நானே உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். சொல்லுங்க".
"மனிதன் ஆதிகாலத்தில் மனிதன் விலங்குகளோடு விலங்காக வாழ்ந்துவந்தான். அவனுடைய ஆறாவது அறிவு வளரத்தொடங்கிய பின்தான் மனிதனாக மாறத் தொடங்கினான். அதுவரை ஒலிகளை எழுப்பி ஒருவருக்கொருவர் செய்து வந்த தொடர்பு அவர்களுக்கு போதுமானதாக இல்லாததால் அதை மேம்படுத்த தொடங் கினர். அதன் பின் கூட்டங்கள் பல சேர்ந்து ஒரு குழுவாக உருவானது. பின் நாடு என்ற அளவிற்கு பல குழுக்கள் ஒன்று சேர்ந்தது. வளர்ச்சியினால் ஒலி தொடர்பு என்பது மொழியாக மாறத் தொடங்கியது. மனிதர்கள் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று மொழி களை உருவாக்கி கொண்டன. ஆரம்ப கட்டத்தில் பேச்சு மொழியாக இருந்தது பின் எழுத்து உருவம் பெற்றது. இதுதான் மொழி தோன்றிய கதை. மொழி என்பது மனிதன் பிறர் சொல்லுவதை புரிந்து கொள்ளவும், தான் நினைப்பதை மற்றவர்க ளுக்கு புரிய வைக்க் பயன்படும் கருவிதான். கருவி எப்படி வளர முடியும்?. அதில் மாற்றங்கள் தான் ஏற்படும்!. அதன் அடிப்படையில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படும் பொழுது பிற மொழி சொற்கள் சேர்ந்து கொள்ளும். இதுதான் சரி. உலக மொழி என்ற அந்தஸ்து பெற்றுள்ள ஆங்கிலத்தில் பிரெஞ்சு மொழி, ஜெர்மன் மொழி, லத்தீன் மொழி வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மனித வளர்ச்சி க்கு, முன்னேற்றத்திற்கு அறிவு வளர்ச்சி தான் முக்கியமே ஒழிய மொழி முக்கிய மில்லை. புரிந்ததா?"
மிக்க நன்றி அய்யா!. என்னுடைய அறியாமையை போக்கிய தங்களுக்கு எனது சார்பாகவும், வலையுலகின் சார்பாகவவும் நன்றி தெரிவித்துக்கொண்டு இத்துடன் பேட்டியை முடித்துக்கொள்கிறேன். நன்றி !.

மீண்டும் சந்திப்போம்.